Sunday 1 November 2015

கனவுலகவாசி (பகுதி 11)

*கனவுலகவாசி (பகுதி 11)

#சிவசங்கர்


ஒரு பகல் 
மரணித்ததும்,


ஒரு இரவு  
ஜனனமாகிறது!

இதற்கிடையில் 

மனிதரிடம் உறவாடும் 

ஓர் ஜீவராசிதான்

இந்தக்கனவு!!


கனவுத்தோழி கூற
நான் கேட்டேன்,
உண்மையில்
எதிர்காலக்கனவு
சுபிட்சக் கனவு
என்பதெல்லாம் என்ன?


அது உண்மையில்
நிச்சயமற்ற ஒன்று!

நாம் ஒரு நூற்றாண்டிற்கு
அடித்தளமிடுகிறோம்!
அதன் போக்கையும் 
முடிவையும்
அடுத்த தலைமுறையின்
இறுதியில்தான் அறியமுடியும்!

ஆம் கனவுலகவாசியே!
வெட்சிக் கரந்தையென
உள்ளூர் போர்களிலும்,

தாயகம் தாண்டிய
உலகப்போர்களிலும்,

அலெக்சாண்டரின் 
அனைத்துப்போர்களிலும்,

குருஷேத்திரப் போர்களிலும்

சிப்பாய்க்கலகத்திலும்

இன்னும் 
எத்தனையோப்
போர்களில்

இளமையானவர்களைப்
வெகுண்டெழச்செய்துப்
புரட்சியாளர்களாக்கி,

உரிமை மீறல்
அதிகார மாற்றம்
அநீதி மற்றும்
சுரண்டல்களுக்காக
ஆயுதம் தொட்டு,

பனிமலை மீதேறும்
கனவுகளுடன் திரியும்
பாமர மனிதர்களை
மூர்க்கத்தின் கையில்
முடமாக்கிக்
கொடுத்துவிட்டு,

துணைவர்கள் 
இல்லா
அகதிகளாய்க் 
கடல்கடந்த
நாடுகளுக்குக் 
கப்பலேற்றி,

அனுப்பிடும் 
அந்தச் சமயம்
அவர்களுள் 
எழும் கேள்விகள்
அனைத்தும் 
கனவுப்பொடியாய்
உதிருகின்றனவே!

அதிலும் 
சிலப் போராளிகளுக்கு,

கனவுகளின் 
பலிப்பீடத்தில்
தோட்டாக்களால்,
தொடுக்கப்பட்ட 
மாலைகளே
பரிசாய் 
விழுகின்றனவே!


இயற்கையன்றி
வேறாரும் 
கையாள முடியாக்
கனவுதான் 
எதிர்காலம்!

                                               - கனவுலகில் பயணிப்போம்.

*கனவுலகவாசி (பகுதி 10)

*கனவுலகவாசி (பகுதி 10)

#சிவசங்கர்

மனித வாழ்வில் 
முக்கியமானது?

காடுகள்தாம்!

காடுகளா?
நான் உலகப்பெரும்
தத்துவத்தை
உன்னிடம் எதிர்பார்த்தேன்!

அரியபெரும்
தத்துவம்தான் இது!
மனிதம் தோன்றியதும்
கலாச்சாரங்கள் கருவுற்றதும்
அவன் ஞானியானதும்
ஆண்டியானதும்
வாழ்வு முடிந்து
வடக்குத்தேடிப் போனதும்
யாவுமே காட்டில்தான்!


அன்றையக் காடுகளே
இன்றைய நகரங்கள்!


பேசப்பழகி - சமைக்கப்பழகி,
பழகப்பழகி - பழகிப்பழகி,
வேட்டையாடி வாழ்ந்து
இனப்பெருக்கம் செய்து


இன்றோ
வாழ்வளித்த விலங்குகளை
வாழவிடாது அழித்துக் 
கொண்டிருக்கிறான்!

இருப்பினும்
ஆங்காங்கே சில விலங்குகள்
மனிதத்துடன் காட்டிலும்,


மனிதப் போர்வையில்
நகரத்திலும் வாழ்கின்றன!

நகரங்களை விட
காட்டில் கொடிய
மிருகங்கள் குறைவே!

காட்டினை விட
அமைதியும் நிழலும் 
நகரத்தில் குறைவே!


அடேயப்பா!
அரியபெரும் உண்மைதான்
அறிய வேண்டிய உண்மைதான்!


இன்றையக் கனவுக்காட்சி
மன நிறைவாகவே 
இருந்தது!



- கனவுலகில் பயணிப்போம்.

*கனவுலகவாசி (பகுதி 9)

*கனவுலகவாசி (பகுதி 9)

#சிவசங்கர்

வந்துவிட்டாயா?

எங்கே நீ வராமல் 

போய்விடுவாயோ

என 

அச்சத்தில்

மூழ்கிக்கொண்டிருந்தேன்!


நீ வரும் கணத்திற்குள் 
நீ தேவதையாய்ப் பார்க்கும்
நானே தூங்கிவிடுவேன் போலும்!


என் தேவதையே!

எப்படி நான் வராதிருந்திருப்பேன்!
மனிதன் 
உழைப்பதற்குச் சமமாய்த்
தூங்குவதற்கும் 
கடமைப்பட்டவனாயிற்றே!

ஆம்,
ஆனால் தற்போதெல்லாம்
இந்த மனிதர்கள்
உறங்கவே நெடுநேரமாகிறது!

கனவில் உலா போவதற்கெல்லாம் 
உங்களுக்கு நேரமுண்டா என்ன!

அட 
நனவுக்காதலியைப் போலவே
நீயும் கோபிக்கிறாயே!

ஆம், அதற்கென்ன செய்வது!
காலமும் கலாச்சாரமும் 

மாறிக்கொண்டே இருக்கிறது!
இங்கு நேரமின்மையே 
அனைவருக்கும் மிகப்பெரியச்
சிக்கல் முடிச்சுகளாகிறது!

கனவுலகவாசி!
மூர்க்கத்தனமிது 
நேரமின்மை என்பது 
நீ உன் இயலாமைக்கும்
முயலாமைக்கும் 
சேர்த்துச்சொல்லும் 
நொண்டிச்சாக்கு!
மியாமி தொடங்கி
மெரினா வரை 
சென்று குதூகலிக்கும் 
அனைவருக்குமே
ஒரு வேலை, 
நேரமின்மை
நண்பர்கள் என
எண்ணிலடங்கா 
நேர்க்காணல்கள்
இருக்கவே செய்கின்றன!

அதற்காக அவர்கள்
வாழ்வின் இன்பகரமானப்
பகுதிகளை இழக்கிறார்களா 
இல்லைத் துறக்கிறார்களா!

"வாழ்தலின் நோக்கம்
வாழ்தலே" என 
நம் ஊர் கோபிநாத்
சொல்லியிருப்பதை
அநேகமானவர்கள்
அணுகவே செய்வதில்லை!


- கனவுலகில் பயணிப்போம்.

*கனவுலகவாசி (பகுதி 8)




*கனவுலகவாசி (பகுதி 8)

#சிவசங்கர்

உன் ஆழ் மனது
ஆசைகளே கனவில்
அருவியாய்க் கொட்டுவன!!

சரி!!
நீ கண்ட கனவுகளில்
ஏதேனும் மறக்க முடியாதவை
இருக்கிறதா??


ஆம் இருக்கிறது!!!

ஏனோ கனவுகள் தன் கற்பனைக்கு 
எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை...


லட்சம் கோடி செய்து எடுக்கப்படும் சினிமாவில் 
பார்த்திட முடியாதவற்றை கூட காட்டும் கனவு!!!

சிறு வயதில் வந்த ஒரு கனவு அது !!!
ஓடி ஆடி விளையாண்டுக் கொண்டிருந்தேன்..

அந்த தருணம் , எதேச்சையாக சில பூக்களை வீச,
ஆளுயரக் கண்ணாடி தூள் தூளாய் போனது !!

எப்படி நடந்ததென்று நான் சிந்திப்பதற்குள்,
உடைந்த சில்லுகள் நொடியில் ஒட்டிக்கொண்டன !!

ஆனால் மீண்டும் முகம் பார்க்கையில் 
பல உருவங்களாய் அது காட்டியது !!


இரவு உணவுக்கு அமர்ந்தேன்.,
என் வட்டலில் வைக்கப்பட்ட ஒவ்வொரு இட்லிக்கும் ,
அம்மா, மொட்டை மாடிக்குச் சென்று 
நிலவை நகலெடுத்துக் கொண்டு வந்தாள் !!

நான் திண்ண திண்ண ,
வானத்தில் நிலவு தேய்ந்து கொண்டே போனது
ஜன்னல் வழியே தெரிய, 
உண்பதை நிறுத்தி விட்டேன் !!

உடல் ஜில்லென்று குளிர,
கொதிக்கிறது என்று சொல்லி, 
மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்..

அங்கு ஒரு எருமை மாட்டுக்காரன்
வரவேற்பரைப் பெண்ணிடம் இருந்து
ஒரு நீளமான பெயர் பட்டியலை 
வாங்கிக்கொண்டிருந்தான்...
அவன் எமன் என்று அப்போது புலப்படவில்லை!!

மனிதர்களின் கடி தாள முடியாமல்,
மருந்தகத்தில் ஒரு டசன் கொசுக்கள் நின்று
ஓடோமஸ் வாங்கிக்கொண்டிருந்தன !!


தலைவலி தலைக்கேறி 
தற்கொலை செய்துகொள்ள
பூமியில் இருந்து குதித்தேன் !!
வானத்தை நோக்கி விழுந்தேன் !!

அங்கு அம்மா வேகமாக வந்து
தற்கொலை செய்துகொண்டதற்கு தண்டனையாக
தனியொரு அறையில் வைத்து தாழிட்டாள் !!
இனியொரு முறை சாக மாட்டேன் என்று
சொன்ன பிறகே என்னை விடுவித்தாள் !!


தூங்கி எழுந்தவுடன் கனவென்று தெளிந்தேன் !!

அடுத்த நாள் 
என் வீட்டுக்கண்ணாடி உடைந்தது !!
அன்று இரவு இட்லி உண்டேன் !!
காய்ச்சல் வந்தது !!
மருத்துவமனை செல்ல நேர்ந்தது !!
மருந்தகம் சென்றேன் !!
ஆனால் நான் மட்டும் சாகாமல் இருந்தேன் !!

"இந்த கனவில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே...யாரையும் குறிப்பிடுவன அல்ல"

என்ற ஒரு எச்சரிக்கை வாசகத்தையும் 
சேர்த்துக் காட்டியிருக்கலாம் அந்தக் கனவு !!!!

தென்னங்கீற்றில் கொட்டிய
மழையாய் அவள் சிரித்தாள்!!!

- கனவுலகில் பயணிப்போம்.

*கனவுலகவாசி (பகுதி 7)


*கனவுலகவாசி (பகுதி 7)

#சிவசங்கர்

அன்றொரு இரவு

கனவுகளுக்கு 
அடிமையாகிவிட்டது போல
ஒரு உள்ளுணர்வு!!!

ஆனாலும் என்னை
மீட்டெடுத்துக்கொள்ளும்
எண்ணமில்லை!!!

இப்போது என்னப்
பிரச்சனை!!

அதீத வேலைகளால்
தூங்க முடியவில்லை!!

அலுவலக வேலைகளை
வெகு சீக்கிரமாய்
முடித்துவிட்டுக் காதலியைக்
காணச்செல்லும் வாலிபனாய்
கனவிற்கு ஏங்கினேன்!!!

அதற்காக 
நனவுலகக் காதலியிடம்
சீக்கிரம் காதல்மொழியைப் பேசி
முடித்துக்கொண்டுவிட்டுக்
கிளம்பினேன்!!!


குருவிடம் சென்றால்,
அரும்பெரும் பழங்களும்
அருகம்பூ மலர்களும் 
எடுத்துச்செல்லலாம்!

காதலியைக் 
காணச்சென்றால்
ஒற்றை ரோஜாவினை
எடுத்துச்செல்லலாம்!


எதிரியினைக்
காணச்சென்றால்
தற்காப்பிற்காக
ஆயுதமொன்றை
எடுத்துச்செல்லலாம்!


விண்ணிற்குச் சென்றால்,
காற்றடைத்தப் பைகளைக்
கொண்டு செல்லலாம்!!!!

கனவிற்குச் செல்லும்போது
என்ன எடுத்துச் செல்வது?


‘உடம்பு என்பதே 
கனவுகள் வாங்கும் பைதானே’
வைரமுத்துவின் வைரவரிகள் 
நினைவுக்கு வருகிறது!!!

கனவுகளில்
சில கனவுகள்
முடிந்த பிறகும்
நினைவில் இருக்கும்!!!!

சில கனவுகள்
நினைவில் இருப்பதைக்
கனவில் காட்டுவன!!!


இன்றையக் கனவு
எந்த ரகமாய் இருக்கும்
என்ற குழப்பத்தோடு
உடல் முழுவதையும்
உறக்கக் கடலில்
கட்டுமரம் போல் இறக்கி
கனவிற்குக் கண்களால்
வலைவீசினேன்!


- கனவுலகில் பயணிப்போம்.

*கனவுலகவாசி (பகுதி 6)

*கனவுலகவாசி (பகுதி 6)

#சிவசங்கர்


கனவில் வரும் பெண்ணே!!
உன்னை நான் 
என்ன பெயர் சொல்லி அழைக்க?

உனக்கு பிடித்தமானவைகளின்
உன் மன இயல்புகளின்
இன்னொரு பிறவியே நான்!!!

ஆக உன் நிலையிலிருந்து
என்னை எந்தப் பெயரிலும்
அழைக்கலாம் நீ!!

எனக்குப் பிடித்தமான
ஒரு பெண்ணின் பெயர்
இருக்கிறது!!!

அப்படியா?? யாரவள்??

உனக்குத்தான் எல்லாம் தெரியுமே?
எங்கே! நீயே சொல்லுப் பார்ப்போம்!!!

தெரியும்!!!
உன்னைப் பேச வைக்க நினைத்தேன்!!
உனக்குப் பிடித்தமான
அந்தப் பெண் நாஸ்தென்கா !!!

அட!! அவளைப்பற்றி
உனக்குத் தெரியுமா??

தெரியுமே!!
நான்கே இரவுகளில் 
தாஸ்தோஸ்வ்கியைக்
காதலித்துப் பித்தனாக்கிக்
கவிஞனாக்கி,

பித்தனும் கவிஞனும்
ஒன்றுதான்!! 
மேலே சொல் பெண்ணே!!!!

ஆம், ஐந்தாவதுப் பகலில்
மீண்டும் பழையக் காதலனுடன்
சென்று விட்டாளே!!! அந்த
நாஸ்தென்கா தானே!!!

இல்லை இல்லை...
இமைப்பொழுதும்
இதனை ஏற்க மாட்டேன்!
அவள் தூய்மையானவள்
என்று அவரே 
ஏற்றுக்கொண்டுவிட்டாரே!
அவளும் அந்தக் கடிதத்தில்,
"உங்களைக் 
காதலிக்கவே செய்கிறேன்,
உங்கள் இருவரையும் 
ஒருங்கே காதலிக்க நேர்ந்தால்,
எப்படி இன்புறுவேன், 
அவர் நீங்களாக இருக்கக்கூடாதா" 
என்று விட்டுக்கொடுக்காமல் பேசி
நீங்காத் துயரமடைகிறாளே!!!!!
இது போதாதா என்ன??

ஒரு ஜென்மம் முழுவதற்கும்
இது போதும் என்று அவர் 
புலம்பினாரே!! 

அதன் பிறகு எத்தனைப்
பாடல்களில் இந்த வரிகள்
அமைந்தன தெரியுமா!

காதலின் இறுக்கமானக்
கட்டுப்பாடுகளைத் 
தளர்த்திக்கொண்டு,
சேர்வது பற்றிப் பின்னால்
பார்த்துக்கொள்ளலாம் என்ற
அவநம்பிக்கையுடன் காதலிப்பதற்கு
இப்படிப் பிரிதல் 
எவ்வளவு புனிதகரமானச் செயல்!!!
அதன் பிறகும் அவள் அவரைக்
காதலிப்பது எவ்வளவு உன்னதம்!!!

பேசிக்கொண்டிருக்கையில்
என் மீது மட்டும் மழை
பொழிந்தது!!!!

புரியாமல் கனவு தேவதையிடம்
கேட்கிறேன்!!

அவள் பதில் சொல்லும் முன்
அம்மா எழுப்பிவிட்டாள்!!!

- கனவுலகில் பயணிப்போம்.

Saturday 2 May 2015

கனவுலகவாசி (பகுதி 5)


*கனவுலகவாசி (பகுதி 5)

#சிவசங்கர்

கனவுலக தேவதையுடன்

விடியும்வரைப் 

பேசப்போகிறேன்!

கனவு 
நிரந்தரமில்லா ஒரு பயணம்!
உண்மையான மாயை!
கனவில் ஓலமிடும்
பாத்திரங்கள்
நம் குணாதிசயங்களே!
உள்ளத்தின் 
விருப்பு வெறுப்புகளே,
கனவில் நடக்கும் 
சம்பவங்கள்!


எதிர்பாராத விதமாய்
எதிர்கால நிகழ்வுகள்
அதில் தோன்றும்
அதிசயங்கள் !

இவற்றையெல்லாம்
நீ அறிவாயா?

தெரியவில்லையே??
நான் அறிவேனா??
ஆராய முடியவில்லை!


நீ அறிவாய்!!!

எப்படிச் சொல்கிறாய்?

ஆம், உன் கனவில்
நீ காண்பதும்,
ஏதோ ஒரு குரல் கூற
நீ கேட்பவைகளும்,
எங்கோ எதிலோ இருந்து
நீ அறிந்தவைதான்!!!


அப்படியானால்
கனவு ஒன்றும் புதிதாய்க்
காட்டுவதில்லையா??
நினைவுகளை நினைவுகூறும்
இடம்தான் கனவா??


அப்படியும் சொல்லலாம்!
அது சரி உன் கனவில் உனக்கு
மிகவும் பிடித்தது என்ன???


குறிப்பிட்டுச் சொல்ல
முடியவில்லையென்றாலும்
என் ஆகச்சிறந்த 
மன திட்பங்களின்
எதிர்பார்ப்புகளின்,
எனக்குப் பிடித்தவற்றின்
ஒட்டுமொத்தக் கலவையாக
நீ இருக்கிறாய்!!!

உருகும் பனிக்கட்டியாய்
சத்தமின்றி வெட்கத்தோடு,
வேகமாய்ச் சிரித்தாள்!

ஏன் சிரிக்கிறாய்??

புரியாமல் பேசுகிறாய்!
நான் நீ தான் !!!!
நான் தான் நீ !!!


- கனவுலகில் பயணிப்போம்.